இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ள நிலையில், ஒரே நாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் களைகட்டிய நிலையில், தற்போது மகா கும்ப மேளா முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் நாளுக்கு பல லட்சம் மக்கள் பங்கேற்றும் வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா இதுவரை கண்டிராத வகையில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக எகிறி உள்ளது. மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினமும் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை நேற்று ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 1,027 பேர் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் திகதிக்கு பிறகு இதுதான், கொரோனாவுக்கு ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு என தெரிய வந்துள்ளது.
இதனிடையே, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதன் பலனாக நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 31 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.