ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி (82), மாரடைப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஈரானில் 1989 முதல் 1997-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ரஃப்சன்ஜனி. ஈரான் ராணுவத்தில் பணிபுரிந்தவரான ரஃப்சன்ஜனி, ஈரான் – இராக் போரில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.
பின்னர், அரசியலில் நுழைந்த அவர், ஈரான் நாடாளுமன்றத் தலைவராக 1980-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 9 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த ரஃப்சன்ஜனி, அதன் பிறகு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது ஆட்சிக்காலத்தில், ஈரானில் பல்வேறு பொருளாதார – சமூக சீர்திருத்தங்களை அவர் கொண்டு வந்தார்.
இந்நிலையில், அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி உடலுக்கு அந்நாட்டின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வல நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் கடைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.