ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி முடிவெடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. எனினும், தமிழகத்திற்கு நம்பிக்கையான வார்த்தைகளை பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், சென்னையில் நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர் பேசியதாவது:-
தமிழை தாய்மொழியாக கொண்டதில் நான் மிகப்பெரிய பெருமை அடைகிறேன். இதுதான் என் வீடு, என் நாடு. தமிழ்தான் எனக்கு எல்லாமுமே. நான் முதலில் தமிழன், பிறகு தான் நான் இந்தியன். என்னை இந்த அளவுக்கு வளர்த்தது தமிழ். எனக்கு சொத்து, புகழ் அனைத்தும் அளித்தது எல்லாமே தமிழ்தான்.
ஆனால், தமிழர்களுக்கு தொடர்ந்து பிரச்சினை இருந்துகொண்டே வருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் கண்டு தமிழர்கள் பொறுமை காத்து வருகின்றன்ர். தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பிரிந்து கிடப்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி எங்களை அனாதை ஆக்கிவிட்டீர்கள். அனைத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் தமிழர்களின் பலம் மற்றும் பலவீனம். அனைத்தையும் ஏற்றுக் கொண்டோம். ஆனால், எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து பாரம்பரியம், கலாச்சாரத்தில் கை வைத்தால் பொறுமையாக இருக்க முடியுமா?
தமிழகம் என்ன தனி நாடா? தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது? தமிழகத்தின் மீது தொடர்ந்து பாரபட்சம் காட்டுவது ஏன்? நம்ம ஊரில் பிறந்தவர்கள்கூட ஜல்லிக்கட்டுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறார்கள். சிலம்பாட்டம் படத்தில் காளையுடன் பழக மிகவும் கஷ்டப்பட்டேன். காளையை பழக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களை கண்டு பெருமைப்படுகிறேன். இளைஞர்கள் போராட என்ன அவசியம் உள்ளது? தமிழக போலீஸைவிட சிறந்த காவலர்கள் உலகில் யாரும் கிடையாது. ஆனால், அந்த காவல்துறை இளைஞர்களை அடிக்கிறது.
தமிழர்கள் அனாதைகள் இல்லை, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தீர்களா? ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு என்ன அருகதை உள்ளது? பசுக்களை துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்களே காளை மீதான அக்கறை பற்றி பேசுகின்றனர். எந்த மிருகத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றால் நீங்கள் எதையுமே சாப்பிடமுடியாது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து 10 நிமிடம் காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்தவுள்ளேன். தமிழ் உணர்வு உள்ளவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அனைவரும் இதேபோன்று நாளை மாலை அவரவர் இருக்கும் இடத்திலேயே 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள். எனக்காக நிற்க வேண்டாம். நம் இனத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நில்லுங்கள். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒன்றிணைந்து போராடுவோம்.
எது எதற்கோ செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறவர்கள், தமிழுக்காகவும், தமிழன் என்ற உணர்வுக்காகவும் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்துங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு சிம்பு கூறினார்.