திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா கண்டல்காடு இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் எம்.ஏ.வீரதுங்க (22 வயது) மற்றும் எல்.ஏ.பியந்த குமார (35 வயது) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
இராணுவ வீரர்கள் இருவரும் அவர்களது படை முகாமில் இருந்து கடற்படை முகாமிற்கு சென்று மீண்டும் தமது முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த மோட்டார்சைக்கிள் பட்டா வாகனமொன்றுடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் பட்டா சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.