ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும்விதமாக இன்று பத்திரிகையாளர்கள் முன்பு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
அப்போது, பத்திரிகையாளர்கள் சிம்புவிடம், சக நடிகையான திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பது குறித்த கேள்வியை கேட்டனர். அதற்கு சிம்பு பதிலளிக்கும்போது, திரிஷா, ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து அதை பராமரித்து வருகிறார். ஆனால், யாரும் அதைப்பற்றி பேசுவதும் இல்லை, அவரை பாராட்டுவதும் இல்லை. அப்படியிருக்கையில் இதை மட்டும் அவரிடம் கேட்டால் எந்தவிதத்தில் நியாயம் என்று கூறினார்.
மேலும், சக நடிகரான ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுள்ளாரே? அவருக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கு அதை புரிய வைக்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று கூறினார்.
சிம்பு – திரிஷாவும் ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.