இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல்: கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவும் ஆஸ்திரேலியா
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கிய ஆட்கடத்தலை செயல்களை கண்காணிக்கும் விதமாக 5 கண்காணிப்பு ட்ரோன்களை இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.
சட்டவிரோத படகுப்பயணம் மற்றும் ஆட்கடத்தல் செயல்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இலங்கைக்கு இந்த ட்ரோன்களை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன்கள் ஆட்கடத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், இயற்கை பேரழிவின் போது மீட்புப் பணிகளுக்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆஸ்திரேலியாவும் இலங்கையும் கூட்டாக வேலைச் செய்வதன் மூலம், ஆஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் படகுப் பயண முயற்சியில் ஒருபோதும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளால் வெற்றியடைய முடியாது என்னும் எச்சரிக்கை செய்தியை விடுக்கிறோம்,” எனத் தெரிவித்திருக்கிறார் மார்க் ஹில்.
இந்த ட்ரோன்கள் ஆட்கடத்தல் செயல்களை கண்டறிவதற்கும் சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவக்கூடியவை எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறையின் மூத்த அதிகாரி ராப் வில்சன்.
இலங்கையின் மன்னார் கடல்பகுதி வழியாக அண்மையில் ஆஸ்திரேலியாவின் நோக்கிய சட்டவிரோத படகுப் பயண முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இலங்கையின் கடல் பகுதியில் ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுதப்படும் எனக் கருதப்படுகின்றது.
கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, ‘கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம், அவர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும்’ எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது