அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக 10 அமெரிக்க தூதர அதிகாரிகளை வெளியேற்றி, 8 உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளை தடுப்புப்பட்டியலில் வைத்துள்ளது ரஷ்யா.
ரஷ்ய நிர்வாகத்தால் தற்போது தடை விதிக்கப்பட்டவர்களில் எஃப்.பி.ஐ இயக்குநரும் அமெரிக்க அட்டர்னி ஜெனரலும் அடங்குவர்.
2020 அமெரிக்க தேர்தலில் தலையிட்டதும், உக்ரைன் நாட்டை சீண்டுவதும், சைபர் தாக்குதல் முன்னெடுத்ததும் தொடர்பாகவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க காரணம் என வெள்ளைமாளிகை நிர்வாகிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர், ரஷ்யா உடனான உறவு பாதிப்புக்கு உள்ளான நிலையிலேயே தற்போது பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கா ஏழு ரஷ்ய அதிகாரிகள் உட்பட அரசாங்கத்திற்கு தொடர்புடைய பலரை, புடின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக குறிவைத்தது.
இருப்பினும், ஜோ பைடனுடனான ஒரு நேரடி சந்திப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடனின் இந்த முடிவை தாங்கள் வரவேற்பதாகவும், உரிய நேரத்தில் பதிலளிப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.