பிரித்தானியாவில் மொத்த குடிமக்கள் எண்ணிக்கையில் 6-ல் ஒருவர் தங்களுக்கான 2 டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கில் இருந்து வெளியேறும் பொருட்டு, கட்டம் கட்டமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணி துரிதமாக செயல்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அறிவுறுத்தலின் படி, தடுப்பூசி அளிக்கும் பணிகள் மிக சிறப்பாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுவரை பிரித்தானிய மக்களில் 8.9 மில்லியன் மக்கள்(16.8%) தங்களின் 2 டோஸ் தடுப்பூசியையும் தவறாமல் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் வேல்ஸ் அதன் முதியவர்களில் கால் பகுதியினருக்கு (22.8%) தடுப்பூசி போட்டுள்ளது, வடக்கு அயர்லாந்தில் இந்த எண்ணிக்கை 17.2% சதவீதமாக உள்ளது.
ஸ்கொட்லாந்தில் முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 15.5% பேர் என தெரிய வந்துள்ளது. இதனிடையே, பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்து நிர்வாகம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கையை துவங்க உள்ளது.
ஆனால் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சுகாதாரத் துறை, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கான தடுப்பூசியை பெற முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்தே, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கையானது பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் தற்போது முக்கால்வாசி பேர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்கொட்லாந்தில், 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 72% பேர்கள் தங்களுக்கான இரு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
வேல்ஸில் இந்த எண்ணிக்கை 67% எனவும் வடக்கு அயர்லாந்தில் 41% எனவும் உள்ளது. பிரித்தானியாவின் சில பகுதிகளில் 16 முதல் 49 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இப்போது முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.