பிரேசில் நாட்டில் அச்சுறுத்தும் கொரோனா பரவலுக்கு நடுவே, உணவுக்காக பொதுமக்கள் கை ஏந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வறுமைக்கு பஞ்சமில்லாத பிரேசில் நாட்டில், கொரோனா பரவலுக்கு முன்னர் இலவச உணவளிக்கும் தொண்டு நிறுவனங்களின் முன்னர் நாளுக்கு 300 பேர் காத்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் அப்பாவி மக்களே இதுபோன்ற நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரேசிலில் முதல் கொரோனா அலை ஏற்பட்ட போது, சுமார் 67 மில்லியன் மக்களுக்கு தலா 83 பவுண்டுகளை மாதம் தோறும் அரசு நிதியுதவியாக அளித்து வந்தது.
இதுபோன்ற ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டங்களில் அதிக நாட்டமில்லாத ஜனாதிபதி Jair Bolsonaro கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
பின்னர் கடும் நிர்பந்தம் காரணமாக அனுமதி அளித்ததுடன், அரசுக்கு அது நிதிச்சுமையை அளிப்பதாக உணர்ந்த அவர், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்னர் உடனடியாக தடை விதிக்கவும் செய்தார்,
ஆனால் பொதுமக்களின் கோபத்திற்கு பயந்து மீண்டும் அறிமுகம் செய்தாலும், உதவித் தொகையில் நேர்பாதியாக குறைத்துள்ளார்.
மட்டுமின்றிம் மிக குறைவான எண்ணிக்கையிலான மக்களுக்கே தற்போது கொரோனா உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரேசில் தற்போது சுகாதார மற்றும் சமூக அவசரகால சிக்கலில் உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 370,000 அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில்,
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், பிரேசில் நாட்டில் சுமார் 60 சதவீத மக்கள் ஒருவேளை உணவுக்கே தத்தளிப்பதாக தெரிய வந்துள்ளது.