இளவரசர் பிலிப் நல்லடக்கம் முடிவடைந்த பின்னர், துக்கத்தை தணிக்க ராணியார் தமது வளர்ப்பு நாய்களுடன் நடக்க சென்றதாக கூறப்படுகிறது.
இளவரசர் பிலிப் உடல் இன்று மாலை உள்ளூர் நேரப்படி மூன்று மணியளவில் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 800 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்க பிரித்தானிய அரச குடும்பம் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாகவே நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இளவரசர் பிலிப் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அரச குடும்ப ஆலோசகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கலந்தாலோசனையின் முடிவில் 30 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்ட அனைவரும், ராணியார் உட்பட முகக்கவசம் அணிந்து காணப்பட்டனர்.
மட்டுமின்றி, 94 வயதான ராணியார் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் தனியாகவே அமர்ந்திருந்து, நிகழ்வுகள் கலந்து கொண்டுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு பின்னர் ராணியார் உடனையே செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இருந்து விடைபெற்று சென்றுள்ளார்.
ராணியார் மிகவும் சோர்வாக இல்லை என்றால் வழக்கம் போல தமது செல்ல நாய்களுடன் நடக்க கிளம்புவார் என்றே கூறப்படுகிறது.
ஏப்ரல் 9ம் திகதி இளவரசர் பிலிப் காலமானதன் பின்னர் ஒவ்வொரு நாள் மாலை நேரமும், ராணியார் தமது செல்ல நாய்களுடன் வின்ட்சர் கோட்டையின் குறிப்பிட்ட பகுதியில் நடக்க செல்வதை வாடிக்கையாகவே கொண்டிருந்தார்.
இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாட்களிலும் ராணியார் இரு செல்ல நாய்களுடன் நடக்க சென்றிருந்தார் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள இளவரசர் ஹரி தனிமைப்படுத்தி இருந்த ஃப்ராக்மோர் கோட்டை அருகே நேற்று இரவு தமது செல்ல நாய்களுடன் ராணியார் சென்றிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதே ஃப்ராக்மோர் கோட்டையில் அமைந்துள்ள சேப்பலில் தான் ராணியாரின் தாயார் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.