ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால் அலெக்ஸி நவல்னியின் மரணம் எந்த நிமிடத்திலும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உடல்நிலை மோசமடைந்து வருவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நவல்னியின் தனிப்பட்ட மருத்துவர் அனஸ்தேசியா வாசிலியேவா மற்றும் அவரது மூன்று சக மருத்துவர்கள், இதய நிபுணர் உட்பட, நவல்னியை சந்திக்கும் வாய்ப்பளிக்குமாறு சனிக்கிழமை சிறை அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நவல்னியின் சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் மிக அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்ய நிர்வாகத்தின் கடும்போக்கு, நவல்னியை காவுவாங்கும் என்றே இருதய நிபுணர் Jaroslaw Aschichmin எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவல்னி உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும், எஞ்சியுள்ள ஒவ்வொரு நிமிடமும் நவல்னியின் உயிரை காப்பாற்றும் சாத்தியம் குறைந்து வருவதாகவும் அவர் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நவல்னியின் உடல் எடை மொத்தமாக 17 கிலோ அளவுக்கு குறைந்துள்ளதாக அவரது மனைவி ஜூலியா கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரபல பிரித்தானிய நடிகர் ஜூட் லா உட்பட 70கும் மேற்பட்ட பிரபலங்கள் அலெக்ஸி நவல்னி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.