மும்பை அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு காரணமாக விளங்கிய அமித் மிஸ்ராவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பாண்டின் டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் மோதின. இப்போட்டியிம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் பலம் கொண்ட மும்பை அணியை இந்த அளவிற்கு சுருட்ட காரணம், டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தான்.
ஏனெனில், இந்த போட்டியில் அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக தனது 3-வது ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மாவையும், 6-வது பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து, தனது கடைசி ஓவரின் 5-வது பந்தில் பொல்லார்டின் விக்கெட்டையும் வீழ்த்தி, மும்பை அணியின் பேட்டிங்கையே நிலைகுலைய செய்தார். இதனால் அவரை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.