மும்பை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய மும்பை அணியின் துவக்க வீரரான, டி காக் 1 ஓட்டத்தில் அவுட்டாகி வெளியேறினார்.
அதன் பின் இரண்டாது விக்கெட்டிற்கு ரோகித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தார். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 24 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 44 ஓட்டங்களில் வெளியேறினார்.
இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) என வெளியேறினார். தனி ஒருவனாக போராடிய இஷான் கிஷனும் கடைசி கட்டத்தில், 26 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை அணி, இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டும், அவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா 7 ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஸ்மித் ஷிகர் தவானுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 33 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 7 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18-வது ஒவரில் ஹெட்மயர் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 7 ஓட்டங்கள் கிடைத்தது.
19-வது ஓவரில் 10 ஓட்டங்களும் அடிக்க, இறுதியில், டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி அணி புள்ளிப்படியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.