அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் ஒரு சிறிய ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.
Ingenuity (புத்தி கூர்மை) என அழைக்கப்படும் இந்த ட்ரோன் செவ்வாய் கிரகத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே காற்றில் பறந்தது. ஆனால், இதுவே பூமியிலிருந்து மற்றோரு கோளில் கட்டுப்டுத்தப்பட்ட முதல் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை ஓட்டம் கடந்த 3 வாரங்களாக திட்டமிடப்பட்டு இன்று வெற்றிகமாக செயல்படுத்தப்பட்டது.
இந்த சிறிய ஹெலிகாப்டர் மூலம் எதிர்வரும் நாட்களில் செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
Rotocraft என்றும் அழைக்கப்படும் இந்த சிறிய ஹெலிகாப்ட்டரை, நாசாவின் Perseverance ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் பத்திரமாக செவ்வாய் கிரகத்திற்கு சுமந்து சென்றது.
பல நாட்களாக கனவு கண்டு வந்த இந்த “செவ்வாய் கிரக ரைட் பிரதர்ஸ் தருணம்” தற்போது நனவானது என நாசா விஞ்ஞானிகள் பெருமிதமாக தெரிவித்துள்ளனர்.
1903-ஆம் ஆண்டில் பூமியில் முதல் முறையாக கட்டுப்படுத்தப்பட்ட விமானத்தை வில்பர் மற்றும் ஆர்வில் ரைட் சகோதரர்கள் (Orville and Wilbur Wright Brothers) இயக்கி சாதனை படைத்தனர்.
அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 118 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக வேறு உலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட விமானம் வெற்றிகரமாக பறக்க வைக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.