கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் நடிகர்கள் சத்யராஜ், சசிகுமார், ஜூனியர் எம்ஜிஆர், சமுத்திரக்கனி, மாரிமுத்து, சிங்கம் புலி நடிகைகள் மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, பிரபல பின்னணி பாடகர் அந்தோணிதாசன் இசை அமைத்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பொன்ராம் விவரிக்கையில்,’ எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ராமசாமியாக சத்யராஜ் நடித்திருக்கிறார். அன்பளிப்பு ரவி என்ற கதாபாத்திரத்தில் அவரது மகனாக சசிகுமார் நடித்திருக்கிறார். ஒரு சின்ன விடயத்திற்காக தந்தையும் மகனும் பேச்சு வார்த்தை இல்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதும், எந்த விடயம் இவர்களை ஒன்றிணைக்கிறது என்பதையும் சுவராசியமான கொமர்ஷல் அம்சங்களுடன் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம்.’ என்றார்.
‘எம்ஜிஆர் மகன்’ ஏப்ரல் 23ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்களின் நலன் கருதியும், இப்படத்தை பட மாளிகையில் கொண்டாடவேண்டும் என்பதாலும் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக பட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.