ஈஸ்டர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று (புதன்கிழமை) காலை 8.45மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
ஈஜ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், பேராயர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதேநேரம், இந்தத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
இதன் காரணமாக நேற்று பிற்பகல் 4 மணி முதல் இன்று பகல் 12 மணிவரை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி, கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் மாலை 6 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.
அதேபோல மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட ஆராதனையுடன், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்து மறைமாவட்ட ஆலயங்களிலும் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.