தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் வந்தன. என்றாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
6 லட்சம் தடுப்பூசி
இந்தநிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு 6 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வந்தடைந்தது. பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு வந்த கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தட்டுப்பாடு இல்லை
தமிழகத்தில் தேவையான அளவுக்கு தடுப்பூசி மையங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகள் 4 ஆயிரத்து 487 தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடங்கிய முதல் தற்போது வரை தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் போடப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் 48 லட்சத்து 7 ஆயிரத்து 148 தடுப்பூசிகள் முற்றிலுமாக போடப்பட்டுள்ளது. மேலும் தற்போது கூடுதலாக 6 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது.
வீணாவது ஏன்?
தமிழகத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையத்திலும், தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருகிறவர்களுக்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனால் 10 பேருக்கு போடும் வகையில் உள்ள தடுப்பூசி மருந்தை திறந்தவுடன், ஒருவர் வந்தாலும் தடுப்பூசி போடப்படும். அதனால் தான் தடுப்பூசி வீணாகிறது. மேலும் அதிக மையம் உள்ளதால் தடுப்பூசி வீணாகிறது. கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மே 1-ந்தேதிக்கு பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கியவுடன் தடுப்பூசி வீணாவது குறையும்.
தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ மருந்தை 41 லட்சத்து 21 ஆயிரத்து 781 பேர் முதல் தவணையும், 6 லட்சத்து 85 ஆயிரத்து 365 பேர் 2-வது தவணையும் எடுத்துள்ளனர். தமிழகத்தில் இரு தடுப்பூசியும் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் இரண்டு தடுப்பூசியை போடலாம். தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 49 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளது. தொடர்ந்து 5 லட்சம் வரவுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை
தமிழகத்தில் 240 டன் ஆக்சிஜன் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 400 டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1,200 டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதி உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது. வேலூர் மருத்துவமனையில் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை. தமிழகத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 32 ஆயிரத்து 405 படுக்கைகள் உள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது.
மேலும் தமிழகத்தில் மிக அதிக நோய் தொற்றுடன் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 54 ஆயிரத்து 342 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரத்து 217 உள்ளது. தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்துக்கு 6 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் விமானத்தில் வந்தன தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை
Loading...
Loading...
Loading...