ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து (UK) அதிகபட்சமாக இன்னும் 25 ஆண்டுகளுக்குள் வடக்கு அயர்லாந்து பிரிந்து தனி நாடாக மாறக்கூடும் என புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஐரிஷ் எல்லையின் இருபுறமும் வடக்கு அயர்லாந்து பிபிசியின் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியின் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், வடக்கு அயர்லாந்து இன்னும் 10 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் 25 ஆண்டுகளுக்குள் பிரிந்துவிடும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு அயர்லாந்து பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 49 சதவீதத்தினர் இங்கிலாந்துடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர், 43 சதவீதத்தினர் அயர்லாந்துடன் இணைந்து ‘ஐக்கிய அயர்லாந்தாக’ (United Ireland) விரும்புகின்றனர், மீதம் 8 சதவீதத்தினர் அதைப்பற்றி தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அயர்லாந்து (Republic of Ireland) எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 51 சதவீதத்தினர் ‘ஐக்கிய அயர்லாந்து’க்கு ஆதாரவாக வாக்களித்தனர், 27 சதவீதத்தினர் பிரித்தானியாவுடனே இணைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர் மற்றும் மீதம் உள்ள 22 சதவீதத்தினர் தெரியவில்லை என பதிலளித்துள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் வடக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருக்குமா என்று கேட்டபோது, வடக்கு அயர்லாந்தின் 55 சதவீதத்தினரும் மற்றும் அயர்லாந்து குடியரசின் 59 சதவீதத்தினரும் ஆம் என பதிலளித்துள்ளனர்.
ஆனால் 25 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை இருக்குமா என்று கேட்டபோது, வடக்கு அயர்லாந்தில் 51% பேரும் அயர்லாந்து குடியரசில் 54% பேரும் வடக்கு அயர்லாந்து இங்கிலாந்தை விட்டு வெளியேறி இயக்கிய அயர்லாந்தாகிவிடும் என தெரிவித்துள்ளனர்.