அந்த்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் துடுப்பாட்டத்தில் மிரட்ட, ஒரு வழியாக 18 ஓட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.
முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பாப் டு பிளிஸ்சிஸ் (95 நாட்அவுட்), ருத்துராஜ் (64), மொயீன் அலி (25) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் 221 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் ஷுப்மான் கில் ரன்ஏதும் எடுக்காமல் அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.
இன்றைய போட்டியில் தீபக் சாஹர் பந்து வீச்சு தீப்பொறியாக இருந்தது. நிதிஷ் ராணாவை 9 ஓட்டங்களில் சாய்த்தார். மேலும், ஒரே ஓவரில் மோர்கன் (7), சுனில் நரைனை (4) அடுத்தடுத்து வீழ்த்தினார்.
ராகுல் திரிபாதியை லுங்கி நிகிடி 8 ஓட்டங்களில் வீழ்த்த கொல்கத்தா 31 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. தீபக் சாஹர் முதல் 3 ஓவரில் 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
31 ஓட்டங்களுக்குள் ஐந்து டாப் ஆர்டர் துடுப்பாட்டவீரர்களை இழந்த கொல்கத்தா கதி அவ்வளவுதான் என நினைக்கும்போது, ஐந்தாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த அந்த்ரே ரஸல் ருத்ர தாண்டவம் ஆடினார்.
இதனால் கொல்கத்தா 10.1 ஓவரில் 100 ஓட்டங்களைத் தொட்டது. அந்த்ரே ரஸல் 21 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார். இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை திண்டாட்டம்தான் என நினைக்கையில், 12-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார்.
இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் அஜாக்ரதையாக போல்டானார். இதனால் சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போட்டி அப்படியே சென்னை பக்கம் திரும்பியது.
அந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சென்னை எளிதாக வெற்றி பெறும் என நினைத்தால் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 24 பந்தில் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட் கம்மின்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சாம் கர்ரன் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விரட்டினார்.
பேட் கம்மின்ஸ் 23 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இருந்தாலும் அவரால் தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 202 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பேட் கம்மின்ஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லுங்கி நிகிடி 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.