நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வீதி ஒழுங்குகள் மீறப்படுவதாலேயே பெருமளவு வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதிலும் குறிப்பாக போதைப்பொருள் பாவனை, வீதி விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை சோதனையிடுவதற்கான விசேட பொறிமுறை ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
50 வீதமான வீதி விபத்துக்களுக்கு போதைப்பொருள் பாவனையே காரணமாக அமைந்துள்ளது. கஞ்சா, ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களை பாவிப்பதால் இடம்பெறும் வீதி ஒழுங்குகளை மீறும் செயற்பாடுகளிலேயே வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் உபயோகிப்போரை மிக விரைவாக இனங்காணும் வகையில் நவீன உபகரணங்களை உபயோகிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி உபகரணங்களை விரைவாக உபயோகத்திற்கு விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.