எதிர்வரும் வாரங்களில் உக்ரேனிய எல்லைக்கு அருகிலும், கிரிமியன் தீபகற்பத்திலும் நிறுத்தப்பட்டுள்ள தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் குறிக்கோள்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் (Sergei Shoigu) வியாழக்கிழமை கிரிமியாவிற்கு ஒரு ராணுவம் தொடர்பான பயணத்தின் போது தெரிவித்தார்.
மேலும் வெள்ளிக்கிழமை முதல் துருப்புகள் தங்கள் தளங்களுக்கு திரும்புமாறு அவர் உத்தரவிட்டார். மட்டுமின்றி மே 1 ம் திகதிக்குள் இந்த நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனிய எல்லையிலும் கிரிமியாவிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை ரஷ்யா நிறுத்தியது, இதனால் இப்பகுதியில் பதட்டங்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்தது.
கிரிமியன் தீபகற்பத்தில் மட்டும் சுமார் 10,000 வீரர்கள் மற்றும் 40 போர்க்கப்பல்கள் இந்த திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றதாக மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான இந்த கடும்போக்கு நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டது.
கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய இராணுவத்திற்கும் இடையே 2014 முதல் நடந்து வருகிற மோதலில் இதுவரை 13,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிப்ரவரி மத்தியில் இருந்தே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீடுகளின்படி, உக்ரேனிய எல்லையில் 100,000 க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா குவித்திருந்தது.
இதனிடையே, அமெரிக்காவும் ரஷ்யாவை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், எச்சரிக்கையும் விடுத்தது. இந்த நெருக்கடியான சூழலில், பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும்,
உக்ரேனில் எந்த பகுதியிலும் புடினை நேரடியாக சந்திக்க தாம் தயார் எனவும் உக்ரேன் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார், ஆனால் ரஷ்ய தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.