அறிகுறிகள் இன்றி, ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், ஆறு நிமிட நடைபயிற்சி மூலம் எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஏற்பட்டால் ஒருவருக்கு ஆரம்ப அறிகுறிகளாக உடல் அசதி, வலி, கண் சிவந்து போதல், உடல் அரிப்பு, தொடர் வயிற்றுப்போக்கு, நடக்கும் போது மூச்சு வாங்குதல், தொண்டை வலி, மூக்கடைப்பு உள்ளிட்டவை இருக்கும். பாதிப்பு உள்ளவர்கள், உடனடியாக டாக்டர்களின் ஆலோசனையில் சிகிச்சை எடுக்க வேண்டும்.
சிலருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரிந்த பின், நுரையீரலில் தொற்று, ‘சி.டி., ஸ்கேன்’ மூலம் கண்டறியப்படும். பொதுமக்கள், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அறிகுறி இல்லாமல் ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டறிய, தொடர்ந்து ஆறு நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது, மூச்சுத் திணறல் இருந்தால் கொரோனா தொற்றுக்கான அறிகுறிதான். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுகி, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நடைபயிற்சியை, தினமும் 2 அல்லது 3 முறை செய்து, ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை மையத்தில் உள்ளவர்கள், இந்த பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது என்றார்.