முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட கடந்த ஓராண்டில், வைரஸ் தொற்று கட்டுக்குள் இல்லாவிட்டாலும், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், 30 சதவீதம் குறைந்திருப்பதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பும், ஆஸ்துமா நோயாளிகள், அலர்ஜி இருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், தீவிர புகைப்பழக்கம் உள்ளவர்கள் உட்பட, நுரையீரல் தொடர்பான எந்தவிதமான கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ‘என் – 95’ எனப்படும், சுவாச வடிகட்டிகள் கொண்ட முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். துாசு, மாசு இருக்கும் இடங்களுக்கு போகவே கூடாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் துாசு, அழுக்கு இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என, அறிவுறுத்துவோம். ஆனால் பல நேரங்களில், இதையெல்லாம் பின்பற்ற மாட்டார்கள்.
வைரஸ் தொற்று பரவத் துவங்கியதும், மற்றவர்களை விட, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களை, வைரஸ் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், விதிமுறைகளை தவிர்க்கவே கூடாது என்று சொன்னோம். அனைவரும் முக கவசம் அணிவதால், எந்த தயக்கமும் இன்றி இவர்களும் அணிகின்றனர்; இதனால், நுரையீரல் கோளாறுகள் குறைந்து உள்ளது.
துாசு, மாசு, வாசனை, மகரந்த துகள் போன்றவற்றால் ஆஸ்துமா துாண்டப்படுவதும், பொதுவாக பருவநிலை மாறும் காலங்களில் மட்டும் சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கும். இதனால், புது நோயாளிகள் வருவது அதிகமாக இருக்கும். இந்த எண்ணிக்கையும் குறைந்தே உள்ளது. சீசனல் வேரியேஷன் ஆஸ்துமா நிச்சயம் குறைந்து உள்ளது.
முக கவசம் அணிவதால்…
நுரையீரல் குறித்த முக்கியத்துவம், தற்போது தான் தெரிய ஆரம்பித்து உள்ளது. இப்படி ஒன்று இருப்பதையே இப்போது தான் உணர்கிறோம். நுரையீரல் ஆரோக்கியம் குறித்து தற்போது ஆலோசனை கேட்க வருகின்றனர். நுரையீரல் என்பது எளிமையான உறுப்பு. காற்றை சுத்தம் செய்து தருவது ஒன்று தான் அதன் பணி.
வெளிக்காரணிகளால் நுரையீரலை சிரமப்படுத்தாமல் இருந்தாலே போதும்; பிரச்னை வராது. மாசு, அதிக கூட்டம், அதீத வாசனை, அடிக்கடி சளி கோளாறு ஏற்படுவது, நுரையீரலை பாதிக்கும். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் – டி, சிட்ரஸ் அதிகம் உள்ள வைட்டமின் – சி சத்துள்ள பழங்கள், நுரையீரலுக்கு நல்லது. இதனால் தான் வைரஸ் பாதித்தவர்களுக்கு தரப்படும் ஜிங்க், ஜிங்கோவிட், வைட்டமின் – சி போன்றவை நுரையீரலை வலிமையாக்கவே தரப்படுகிறது.
சுவாச பயிற்சி உட்பட நுரையீரலை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும். நுரையீரல் தொற்று அடிக்கடி வந்தால், உடல் மெலிந்து இருக்கும்; இவர்கள் புரதம் அதிகம் உள்ள உணவை சாப்பிட வேண்டும். முக கவசம் அணிவதை நிரந்தரப் பழக்கமாக மாற்றிக் கொண்டால், நுரையீரல் பாதுகாப்பிற்கு நிச்சயம் உதவும்.