நிதி நெருக்கடி காரணமாக உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கப்பல் ஒன்று, ஒரே ஒரு மாலுமியுடன் எகிப்தில் நான்கு ஆண்டுகள் சிக்கிக் கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
பஹ்ரைன் நாட்டவர்கள் சிலருக்கு சொந்தமான அமன் என்ற சரக்கு கப்பல் லெபனான் ஒப்பந்தக்காரர்கள் சிலரால் இயக்கப்பட்டு வந்தது.
குறித்த கப்பலில் சிரியா நாட்டவரான முகமது ஆயிஷா என்பவர் மாலுமியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கப்பல் உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்க, ஒப்பந்தக்காரர்கள் எரிபொருளுக்கான தொகையை செலுத்த தவறியதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் எரிபொருள் இல்லாமல் காற்றின் திசையில் பயணப்பட்ட அமன் என்ற சரக்குக் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் 2017 ஜூலை மாதம் குறித்த கப்பலானது அதன் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்கள் காலாவதியானதால் எகிப்திய துறைமுகமான அதாபியாவில் தடுத்து வைக்கப்பட்டது.
எகிப்திய அதிகாரிகள் கப்பலை தடுத்து வைக்கும் முன்னர், தரைதட்டிய கப்பலில் இருந்து வெளியேறி நீச்சலடித்து கரைக்கு சென்று, உணவுக்கான பொருட்களை முகமது வாங்கி வருவது வழக்கமாக கொண்டிருந்தார்.
எகிப்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், கப்பலின் பொறுப்பாளர் என்ற நிலையில் முகமது வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் கப்பலின் எஞ்சிய ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னரும் முகமது சுமார் நான்கு ஆண்டுகள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கப்பலில் வசித்து வந்துள்ளார்.
2018ல் தமது தாயார் இறந்த தகவல் தெரிய வந்தும், கப்பலை விட்டு வெளியேற முடியாமல், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கும் வந்ததாக முகமது தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கப்பல் தொடர்பான சில முக்கிய அமைப்புகளின் தலையீட்டால், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முகமது விடுவிக்கப்பட்டு, சொந்த நாடான சிரியாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், தமது விருப்பமான கப்பல் தொழிலுக்கே திரும்ப வேண்டும் எனவும், ஒரு சிறந்த மாலுமியாக பெயரெடுக்க வேண்டும் என்பதே முகமதுவின் கனவாக உள்ளது.
நீண்ட நான்காண்டு காலம் முகமது தமது கைவிடப்பட்ட கப்பலுடன் சிக்கியிருந்த பகுதியானது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த எவர் கிவன் சரக்குக் கப்பல் சிக்கியிருந்த அதே பகுதி என முகமது தற்போது தெரிவித்துள்ளார்.