இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படை ஜேர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை கொண்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிகை ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி நோயாளிகளுக்கு படுக்கை வழங்குவதற்கும், முதற்கட்ட சிகிச்சை அளிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் பலியாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதை சமாளிக்க மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் விரைவாக ஆக்சிஜன் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய விமானப்படை 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஜேர்மனியில் இருந்து கொண்டு வருகிறது.
அவற்றை கொரோனா சிகிச்சை அளிக்கும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் மருத்துவமனைகளில் நிறுவி ஆக்சிஜன் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு உற்பத்தி நிலையமும் ஒரு நிமிடத்திற்கு 40 லிற்றர் என ஒரு மணி நேரத்தில் 2400 லிற்றர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும்.
இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியா வந்த சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று நெருக்கடியில் மூன்று பாதுகாப்புப்படைகளும் முடிந்த அளவிற்கு உதவி செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.