வெயில் காலத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறவர்களில் குழந்தைகள் முக்கியமானவர்கள். சாதாரணமாக ஏற்படுகிற நீர்ச்சத்து பற்றாக்குறை தொடங்கி கண் எரிச்சல், அம்மை, கொப்புளங்கள் போன்றவற்றால் குழந்தைகள் அவதிப்படாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் லஷ்மி பிரசாந்த்…
குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கும் காரணங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் முக்கிய பங்கு பெறுகிறது. இதனால், உடலில் இருந்து அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறி நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். நீர்ச்சத்து பற்றாக்குறை காரணமாக, குழந்தைகள் சோர்வு அடைவதை சின்னச் சின்ன அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுநீர் சரியாக போக மாட்டார்கள். உடலில் இருந்து குறைந்த அளவு சிறுநீர்தான் வெளியேறும். மேலும், குழந்தைகளின் கண்கள் வறண்டு உள்ளே போய் காணப்படும். வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்து நாக்கு வறண்டு போகும்.
இத்தகைய பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், மில்க் ஷேக் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு கொப்புளம், கட்டி போன்றவை ஏற்படும். எனவே, காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை விளை
யாடவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் வெளியே போனால், சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தொப்பி அணிந்து கொள்வது நல்லது. இந்தக் காலத்தில் அக்குள் போன்ற இடங்களில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு
உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு தோலின் மேற்பகுதி சிவந்தும் காணப்படும். இந்தப் பிரச்னையை சமாளிக்க மருத்துவரின் ஆலோசனையுடன் உடல் சூட்டைத் தணிப்பதற்கான பவுடரையும் பயன்படுத்தலாம். அதிகமான வியர்வை வெளியேற்றத்தால் Fungal Skin Infection ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
முக்கியமாக அக்குள், தொடை மற்றும் வயிற்றுப்பகுதி சேர்கிற இடங்களில் சிவந்து போய் எரிச்சல் உண்டாகும். இவ்வாறு ஏற்படாமல் இருக்க விளையாடிய பின்னர் நன்றாகக் குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் இடம் குளிர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
குழந்தைகளின் ஆடைகள் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பருத்தி ஆடைகளாக, மெலிதான நிறம் கொண்ட(வெள்ளை, வெளிர் மஞ்சள் நிறங்கள்) ஆடைகளாகப் பயன்படுத்த வேண்டும். தெருக்களில் திரியும் நாய், பூனை போன்ற பிராணிகளுடன் விளையாட அனுமதிக்கக் கூடாது. இதன்மூலம் தொற்றுநோய்கள் பரவலாம்.
சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கான தடுப்பு மருந்துகளை தவறாமல் குழந்தைகளுக்குப் போட வேண்டும். வெயிலால் கண் எரிச்சல், கண் வறண்டு போதல் போன்றவற்றாலும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணிய பழக்கப்படுத்த வேண்டும். மேலும் நீண்ட நேரம் டிவி பார்ப்பதைத் தவிர்ப்பதும் முக்கியம்!’’