இந்தியர் ஒருவர் 1 ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோன தொற்றுக்கு மத்தியில், ஆக்சிஜன் பற்றாக்குறை மிக பெரிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. தினமும் நூற்றுக்கனக்கான கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இறக்கின்றனர்.
இந்த நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பது என்பது கடினமாக மாறியுள்ளது. மீறி கிடைக்கக்கூடிய சிலவற்றை கறுப்பு சந்தையில் ரூ.30,000-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில், உத்திர பிரதேசத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர் மனோஜ் குப்தா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 1 ரூபாய்க்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்பி கொடுக்கிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமீர்பூரில் உள்ள சுமேர்பூர் தொழில்துறை பகுதியில் உள்ள ரிம்ஜிம் இஸ்பாட் தொழிற்சாலையின் உரிமையாளர், குப்தா இதுவரை நூற்றுக்கணக்கான கோவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக 1,000-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தனது போத்தல் ஆலையில் ரூ.1-க்கு நிரப்பிக்கொடுத்துளார்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட குப்தா, இது குறித்து கூறுகையில், “நான் இதேபோன்ற துன்பத்தை அனுபவித்திருக்கிறேன். எனது போத்தல் ஆலைக்கு ஒரு நாளைக்கு 1000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் நிரப்பும் திறன் உள்ளது, மேலும் அனைவருக்கும் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை ரூ.1-க்கு தருகிறேன்” என்று அவர் கூறினார்.
ஜான்சி, பண்டா, லலித்பூர், கான்பூர், ஓராய் மற்றும் லக்னோ உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இப்போது குப்தாவின் சேவையின் முலம் பயனடைந்து வருகின்றனர்.