ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச்சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியம் புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது.
அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும்.
சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார்.
ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு.
அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும்.
உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும். கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும்.
தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.
குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார்.
கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும்.
சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள் .85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம். இதற்காக ஒரு பெண் தனது மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.