இதனால் 2007-ம் ஆண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு 2008-ம் ஆண்டு பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அடுத்த ஆண்டு(2009) நடந்த ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு அவரது கட்சி எழுச்சி பெற முடியாமல் போனது.
இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசில் இணைத்து விட்டார். அவருக்கு முதலில் எம்.பி. பதவி வழங்கிய காங்கிரஸ் பின்னர் அவரை மத்திய மந்திரியாகவும் நியமித்தது.
இந்த நிலையில் இழந்த புகழை நிலைநிறுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். ஏற்கனவே 149 படங்களில் நடித்திருந்த சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘கைதி நம்பர் 150’ என்ற பெயரில் புதிய படத்தை தொடங்கினார்.
இது தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தழுவல் ஆகும். 10 ஆண்டுகளுக்கு பின்பு சிரஞ்சீவி சினிமாவில் நடித்ததால் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று நாடு முழுவதும் சிரஞ்சீவி படம் ரிலீஸ் ஆனது. மொத்தம் 1000 தியேட்டர்களில் படம் வெளியானது.
ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் சிரஞ்சீவி படம் பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். 10 ஆண்டுக்குப்பின் சிரஞ்சீவி படம் வெளியானதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்து விற்கப்பட்டது. தியேட்டர்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.
‘ஆன்லைனில்’ சில விநாடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தியேட்டர் கவுண்டர்களில் டிக்கெட்டுகள் வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். சில நிமிடங்களில் தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து “ஹவுஸ் புல்” போர்டுகள் தொங்கவிடப்பட்டன.
படத்தை பார்த்த ரசிகர்கள் கூறும் போது, சிரஞ்சீவி வழக்கமான உற்சாகத்துடன் சண்டை காட்சிகளில் நடித்து இருப்பதாகவும், நடன காட்சிகளிலும் நடிப்பிலும் எப்போதும் போல் தனது பாணியில் ஸ்டைலாக நடித்து இருப்பதாகவும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
ஆந்திர பல்கலைக்கழக மாணவர் அனில் குமார் கூறுகையில், சிரஞ்சீவி இளமையுடனும் எழுச்சியுடனும் நடித்து இருக்கிறார், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளார் என்றார். சிரஞ்சீவி படத்தை அவரது மனைவி சுரேகா மற்றும் குடும்பத்தினர் ஜதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்று பார்த்தனர்.