இளவரசர் பிலிப்பின் மரணம், மக்கள் மனதில் ஒரு குறிப்பிட்ட கேள்வியை எழுப்பியுள்ளது. 73 ஆண்டுகள் தோளோடு தோள் நின்று, பலமாக, உற்ற துணையாக விளங்கிய கணவரின் பிரிவால் மகாராணியார் சோர்ந்து போயிருக்கும் நிலையில், அடுத்து பிரித்தானியாவை ஆளப்போவது யார் என்ற கேள்விதான் அது! அது ஏன் என்று தெரியவில்லை, அடுத்து இளவரசர் சார்லஸ்தான் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும் என்று யாருமே கூறமாட்டேன்கிறார்கள்.
சார்லஸை வேல்ஸ் இளவரசர் என்று அழைப்பதற்கே இப்போதெல்லாம் மக்களுக்கு விருப்பமில்லை. இனிமேல் யாருக்கும் அந்த பெயரை அளிக்கக்கூடாது என்ற குரல்களும், இளவரசராகவே இருந்தாலும் ஸ்காட்லாந்துக்கு வரக்கூடாது என்ற எதிர்ப்பும் எழுந்ததையும் மறக்கமுடியுமா?
ஆக, அடுத்து மன்னராக அல்லது மகாராணியாக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி, இளவரசர் சார்லசையும் தாண்டி மக்கள் வேறு யாரையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.
ஒரு காலகட்டத்தில் மக்கள் மனதில் ஹீரோவாக வலம்வந்தார் இளவரசர் ஹரி. ஆனால், அவர் ஒரு அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து ராஜ குடும்பத்துக்குள் கொண்டுவர, அவரை ராஜ குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவே மக்கள் தயங்கினார்கள். ஒரு வழியாக கொஞ்சம் மக்கள் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்ட நிலையில், திடீரென ஒரு நாள் இளவரசர் ஹரியை இழுத்துக்கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல் அரண்மனையை விட்டு வெளியேறிய மேகன், பின்னர் பிரித்தானியாவை விட்டே வெளியேறிவிட்டார்.
முதலில் அதிர்ந்தாலும், இப்போதைக்கு அவர்கள் போனது பெரிய நிம்மதி, அவர்களுக்காக செலவிடப்படும் மக்களின் வரிப்பணம் மிச்சம் என மக்கள் மட்டுமல்ல, ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்களே நிம்மதிப் பெருமூச்சு விடும் ஒரு சூழல் ஏற்படுவிட்டது. ஆக, அடுத்த மன்னர் வரிசையில் ஹரிக்கு இடமில்லை.
அப்படியானால், தெளிவாகவே மக்கள் காட்டிவிட்டார்கள், அடுத்து மன்னராக, மகாராணியாக தாங்கல் விரும்புவது இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டைத்தான் என்று. இம்மாதம் (ஏப்ரல்) 29ஆம் திகதி, இளவரசர் வில்லியம் கேட்டின் பத்தாவது ஆண்டு திருமண நாள் விழாவை நாடே இதுவரை இல்லாத அளவுக்கு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவருகிறது.
வில்லியம் கேட் தம்பதியரின் உறவினர்களும் நண்பர்களும், மாறி மாறி தம்பதியரைக் குறித்து பேட்டிகள் கொடுத்து, அவர்களை முன்னிலைப்படுத்திவருகிறார்கள். வில்லியம் கேட்டை நோக்கி ஒரு அவமதிப்பை வீசுங்கள், அவர்கள் அப்போதும் பதிலுக்கு வாசனையையே தருவார்கள், இங்கிலாந்தின் ரோஜாக்களைப் போல என்கிறார் ஒருவர்.
அழகில் மட்டுமல்ல, அமைதியே உருவான கேட்டை மேகன் உட்பட பலர் முயற்சித்தும், அவரது அமைதியைக் குலைக்கமுடியவில்லை என்கிறார் ஒருவர். தன்னை அரண்மனை ஊழியர்கள் மதிக்கவில்லை என தாம் தூம் என ஆட்டம் போட்ட மேகன் ஒரு பக்கம் இருக்க, ஒரு முறை, வில்லியமும் கேட்டும் Norfolkஇலுள்ள ஒரு மதுபான விடுதிக்குச் சென்றிருந்தார்களாம்.
அங்கே சென்றால், விடுதி நிரம்பி வழிகிறது, தம்பதியருக்கு இடமில்லை, நினைத்தால் கோப்பப்பட்டிருக்கலாம், ஆனால், சிரித்துக்கொண்டே, அடடா தாமதாக வந்துவிட்டோமே என்றார்களாம் வில்லியம் கேட் தம்பதியர்.
வரலாற்றில், இதுவரை பிரித்தானியா அடுத்து வருவது இப்போது இருப்பதைக் காட்டிலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்த்துவந்துள்ளது.
ஆனால், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டுடன் இப்போது அந்த தேடல் முடிந்துவிட்டது… எங்கள் எதிர்கால மன்னரும் மகாராணியும் இளையவர்களுக்கே உரிய நேர்மறை எண்ணங்களைக் கொண்டுள்ள அதே நேரத்தில், அனுபவ ஞானமும் அவர்களுக்கு இருக்கிறது என்கிறார் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான Petronella Wyatt.
அத்துடன், இருவரும் தங்களிலுள்ள நேர்மறை விடயங்களை மட்டுமல்ல எதிர்மறை விடயங்களையும் நன்கறிந்தும், இருவருக்கும் இடையில் துளிர்க்கும் அன்பை பகிர்ந்துகொள்கிறார்கள், ஒருவர் மற்றவருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், இருவரும் இதுவரை ஒருவரை மற்றவர் விட்டுக்கொடுத்ததும் இல்லை.
ஆக, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் கையில் பிரித்தானியா பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் அவர். இது Petronellaவின் கருத்து மட்டுமல்ல, பெரும்பாலான பிரித்தானியர்களின் கருத்தும் எனலாம்!