மலேரியா மற்றும் முடக்குவாதத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மருந்துகள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கிறது என சிங்கப்பூரில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை இதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், மலேரியா மற்றும் முடக்குவாதத்துக்கு வழங்கப்படும், povidone-iodine எனும் தொண்டையில் அடித்துக் கொள்ளும் ஒரு ஸ்பிரே மற்றும் hydroxychloroquine எனும் மருந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பெரும் உதவி அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு மருந்துகளும் மிக எளிதில் கிடைக்கக்கூடியது என்பதால் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மே மாதத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம் தங்கும் குடியிருப்பில், இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியா, வங்க தேசம், சீனா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாமாக முன்வந்து இதில் பங்கேற்றனர்.
கொரோனா அறிகுறி அற்ற 21 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 3,037 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அதில், இந்த இரண்டு மருந்துகளும் எடுத்துக் கொண்டவர்களில், 54 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டது. மேலும், இந்த மருந்துகள் ‘Key Entry ‘ என சொல்லக்கூடிய வைரஸ் நுழைவுவதற்கான முக்கிய வழியான தொண்டையை மிகவும் பாதுக்கப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் ஆய்வுகள் செய்தால், இந்த மருந்துகளைக் கொண்டு கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க முடியும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.