தங்களின் தேவைக்கு அதிகமாக இருக்கும் 60 மில்லியன் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெடரல் நிர்வாகத்தின் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வுக்குப் பிறகு வரும் மாதங்களில் தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்படும் என வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அனுமதி பெறாமலையே அமெரிக்கா மில்லியன் கணக்கிலான தடுப்பூசி டோஸ்களை சேமித்து வைத்துள்ளது.
உலகின் பல நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுமாறி வரும் நிலையில், அமெரிக்கா தேவையின்றி தடுப்பூசிகளை பதுக்குவதாக கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சுமார் 4 மில்லியன் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி டோஸ்களை மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன் பகிர்ந்து கொள்வதாக கடந்த மாதம் ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்தார்.
அதேபோன்று, தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள மிக மோசமான சூழ்நிலையில், மருத்துவ உதவிகள் கோரி பைடன் நிர்வாகத்திற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக 10 மில்லியன் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி டோஸ்களை மிக விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் 50 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் பல கட்ட தயாரிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.