இந்தியாவில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் உடனடியாக தேவையான மருத்துவ உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவது உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
முன்னதாக இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில் இந்தியா பல்வேறு உதவிகளை செய்தது என்றும்,
தற்போது இந்தியாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.