எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவின் தற்போதைய அபாயகரமான கொரோனா நிலைமைகள் காரணமாக மே 15 வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று மோரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினால் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் – உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எவ்வாறெனினும் இந்த முடிவு மே 15 க்கு முன் பரிசீலிக்கப்படும் என்றும் மோரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.
இரண்டாவது கொரோனா அலை மருத்துவமனை படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையைத் தூண்டியுள்ளது. இந்த எழுச்சி பல நாடுகளை இந்தியா மீதான பயண கட்டுப்பாடுகளை குறைக்க தூண்டியுள்ளது.
இங்கிலாந்து, ஹாங்கொங், கனடா, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்தியாவில் இருந்து பயணிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளன, அதே நேரத்தில் அமெரிக்காவும் ஜேர்மனியும் இது தொடர்பான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.