யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் நேற்று வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டா் எஸ். மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவர்களும் இணைந்து சந்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.
அவருக்கு அஞ்சியோபிளாஸ்டி (இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய நாளத்தின் ஊடாக செய்யப்படும் ஓர் அறுவை சிகிச்சை) செய்யப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சையின் பின் தான் நலமாக இருப்பதாக துணைவேந்தர் அருவி இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த எனது வகுப்பு தோழன் இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டா் எஸ். மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது மருத்துவ நண்பர்களுக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன் எனவும் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா அவர்கள் அருவி இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு கடந்த ஏப்ரல்-21 ஆம் திகதி இரவு திடீர் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டு முதற்கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.