பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா வின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட உள்ளது
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளது கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான ஓர் அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் திருத்தங்களை பரிந்துரை செய்துள்ளனர்.
இதேவேளை, இந்த உத்தேச சட்டத்தின் பல சரத்துக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நடைமுறையில் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனைகள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. பிரிட்டனில் கடந்த 2000ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் அனுமதிகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.