இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் நாள்தோறும் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. மற்றொரு புறம், சில மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த பின்னணியில், கொரோனா சிகிச்சைக்கு தேவையான 17 மருத்துவ உபகரணங்களை சில நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்ய 3 மாதங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் குப்பிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், நெபுலைசர்கள், வென்டிலேட்டர்கள் உள்பட 17 மருத்துவ உபகரணங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தற்போதைய கொரோனா சூழலில் மேற்கண்ட மருத்துவ உபகரணங்கள் அவசரமாக தேவைப்படுகிறது. எனவே, இந்திய இறக்குமதியாளர்கள் மேற்கண்ட 17 மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய 3 மாத காலத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் சுங்க இலாகா ஒப்புதலை பெற்ற பிறகு, உள்நாட்டில் விற்பனை செய்வதற்கு முன்பு, சட்ட விதிகளின்படி இறக்குமதியாளர்கள் கண்டிப்பாக பிரகடனங்களை வெளியிட வேண்டும்.
மேலும், இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டவுடன், எவ்வளவு பொருட்கள் வருகிறது என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘‘இந்த அனுமதியால், கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களின் தேவை பூர்த்தி ஆகும்’’ என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையில் நாள்தோறும் பாதிப்பு உச்சம்…ஆக்சிஜன் சிலிண்டர், செறிவூட்டி, நெபுலைசர் உள்பட 17 மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி
Loading...
Loading...
Loading...