பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 ஆண்டுகளாக அனைவரும் அறிந்த ஒரே அலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள், பெருந்தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றோர் பிரத்யேக அலைபேசி எண் வைத்திருப்பது வழக்கம். அந்த எண்ணில் அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அனைவராலும் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாது.
ஆனால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 ஆண்டுகளாக வைத்துள்ள அலைபேசி எண் அனைவருக்கும் தெரியும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2006-ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் எம்.பி.யாக பணியாற்றிய போது, செய்தியாளர் சந்திப்பில் தன்னை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணை வெளியிட்டார். பத்திரிகைகளிலும் இந்த எண் வெளியானது.
அதே அலைபேசி எண்ணை போரிஸ் ஜான்சன் கடந்த 15 ஆண்டுகளாக வைத்திருப்பது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், மிரட்டல் போன்ற பிரச்னைகளை உருவாக்கும் என எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
சமீபத்தில் போரிஸ் ஜான்சன் தொழிலதிபர் ஜேம்ஸ் டைசனுடன் வரி பிரச்னை தொடர்பாக பரிமாறிக் கொண்ட ஆடியோ மற்றும் வாட்ஸ்அப் செய்தி பரிமாற்றங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், உள்துறை அலுவலக மந்திரி விக்டோரியா அட்கின்ஸ் Victoria Atkins, பிரதமர் “தேசிய பாதுகாப்பு விஷயத்தில் தனது பொறுப்புகளை அறிவார்” என்று கூறியுள்ளார். மேலும், அந்த எண் பொது தளத்தில் இருந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியதற்காக ஊடகங்களை விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே ‘பிரதமரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் ‘சுவிட்ச் ஆப்’ என வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.