மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேரூந்தில் அதி கூடிய பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் கொரோனா தொற்று சுகாதார நடை முறைகளை மீறி யாழ்ப்பாணம் நோக்கி பயணம் மேற்கொண்டமை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளர்.
மன்னாரில் இருந்து போக்கு வரத்து சேவையை முன்னெடுக்கும் அரச, தனியார் பேரூந்துகள் உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றி, பேரூந்தின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றி போக்கு வரத்துச் சேவையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று முந்தினம் புதன் கிழமை மாலை இடம் பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் இராணுவம்,பொலிஸ்,கடற்படை அதிகாரிகள்,சுகாதார துறையினர்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது கொரோனா தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இருந்து மேற்கொள்ளப்படும் அரச தனியார் போக்கு வரத்துச் சேவைகள் தொடர்பாக விசெட கவனம் செலுத்தப்பட்டது.
-இதன் போது மன்னாரில் இருந்து மேற்கொள்ளப்படும் அரச , தனியார் போக்கு வரத்துச் சேவைகள் உரிய சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெற வேண்டும் எனவும், மக்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடை முறைகளை மேற்கொள்ளுகின்றமை தொடர்பில் பேரூந்தின் சாரதி நடத்துனர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டதோடு, பேரூந்தின் ஆசனங்களுக்கு அமைவாகவே பயணிகளை ஏற்ற வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டதோடு, அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றினால் மன்னார் பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடியில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேரூந்தில் அதி கூடிய பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் பேரூந்தின் பின் வாசலில் பயணிகள் தொங்கிக் கொண்டு கொரோனா சுகாதார நடை முறைகளை மீறி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக குறித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்தனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.