வீடு பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து சிரிக்கும் சிறுமியின் ஒரிஜினல் பிரதி, 3.7 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, இயலாதவர்களின் கல்வி கடன்களை கட்டப் பயன்படுத்தப் போவதாக அந்த சிறுமி தெரிவித்திருக்கிறார்.
ஸோயி ராத் என்ற அந்த சிறுமிக்கு அப்போது 4 வயது இருக்கும். சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்தார் அந்த சிறுமி. அப்படி என்ன செய்து விட்டார் என்று நினைக்கிறீர்களா? ஒரு சின்ன சிரிப்பு.. கள்ளம் கபடமில்லாத அந்த சிரிப்பு தான் அவரை உலக பிரபலம் ஆக்கியது. எப்போது சிரித்தார் என்பதில் தான் இருக்கிறது அதற்கான ரகசியம். தன் வீடு நெருப்பில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, கேமராவை பார்த்து சிரித்திருக்கிறார் அந்த சிறுமி.
அவர் சிரிக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான மீம்களுள் ஒன்று. கடந்த 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸோயி ராத்துக்கு இப்போது 21 வயது. சூழ்நிலைகள் மற்றும் சிக்கல்களை விவரிக்க இந்த படம் பல்வேறு சூழல்களில் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் அவரது மீம்ஸ்கள் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், ஸோயி ராத், 17 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தின் ஒரிஜினல் பிரதியை தற்போது என்எப்டி ஏலத்தில் விற்றிக்கிறார். அது 4,30,000 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில், சுமார் 3.7 கோடி ரூபாய்..! அம்மாடியோவ்..! இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, கல்விக் கடன் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்களின் கல்வி கடன்களை கட்டவும், பிற நற்பணிகளுக்காவும் அவர் தந்திருக்கிறார். உண்மையில் உயர்ந்த உள்ளம் தான்!!