பிரபல தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகி, வேறு பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக்கை உருவாக்கிய முக்கியமானவர்கள் பிரஷாந்த் கிஷோரும் ஒருவர். இவர் 2014’இல் பாஜகவிற்கும், அதன் பிரதமர் வேட்பாளரான மோடிக்கும், தேர்தல் உத்திகளை வகுத்து கொடுத்து பெரு வெற்றி பெறச் செய்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.
பின்னர் அவர், பீகாரின் நிதீஷ் குமார் கட்சியில் இணைந்து அவருடன் நெருக்கமாக பணியாற்றினார். பிரஷாந்த் கிஷோரின் பணிகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் அவருக்கு நிதீஷ் குமார் வழங்கினார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமல்லாது கடந்த காலங்களில் பல கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அவர் பணியாற்றியுள்ளார். பஞ்சாபில் அமரீந்தர் சிங், டெல்லியில் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி என பல தலைவர்களின் முதல்வர் கனவை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில், நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சிக்கும் தேர்தல் உத்திகளை இவர் தான் வகுத்துக் கொடுத்து வெற்றி பெறச் செய்தார்.
தேர்தல் வல்லுனராக இவர் பணிபுரிந்து தோல்வியடைந்தது என்றால் அது உத்தரபிரதேச காங்கிரஸ் மட்டும் தான். மற்றபடி எதிலும் இவர் தேர்தல் ஆலோசகராக இருந்து தோல்வியடைந்ததில்லை.
இந்நிலையில், திடீரென தேர்தல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இனியும் இந்த தளத்தில் செயல்பட விரும்பவில்லை என்று ஒரு பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தேர்தல் ஆலோசனை பணிகளில் இருந்து வேறு பணிகளில் கவனம் செலுத்துவதோடு, குடும்பத்திற்கும் நேரம் செலவிட விரும்புவதாகக் கூறிய அவர் மேலும், தான் விலகுவதால் ஐ-பேக் கலைக்கப்படாது என்றும், நிறுவனத்தில் இதர உறுப்பினர்கள் இதை தொடர்ந்து வழிநடத்துவர் என்றும் கூறினார்.