திமுக தலைவர் கருணாநிதி வருடந்தோறும் பொங்கல் திருநாள் அன்று கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை தன் வீட்டில் சந்தித்து ஆளுக்கு தலா பத்து ரூபாய் புது நோட்டுகள் கொடுப்பது வழக்கம்.
இந்த பத்து ரூபாயை பெறுபவர்கள் அதை தங்கள் தலைவரின் அன்பாக கருதி பத்திரப்படுத்தி வைப்பார்கள். ஆனால் வரும் பொங்கல் அன்று கருணாநிதியை யாரும் சந்திக்க வேண்டாம் என தலைமை கழகம் தொண்டர்களிடம் கூறியிருப்பது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக உடல் நலகோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்த கருணாநிதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டாலும், அவரால் முன்பு போல் இயங்க முடியவில்லை.
மேலும், நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, யாரையும் சந்திக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். படுத்த படுக்கையாக இருக்கிறார்.
அவரது அதிகபட்ச பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்சி பார்ப்பதுதான். நுரையீரல் தொற்றின் பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணமடையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் அவர் இந்த பொங்கலுக்கு கட்சியினரை சந்திக்க மாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.