மொத்த மக்கள் தொகையில் சரிபாதி முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர், கோடைகாலத்தில் சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள சுவிஸ் நிர்வாகங்கள் சரியான பாதையில் செல்வதாக கொரோனா தொடர்பான நிபுணர்கள் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
அதன் முதன்மை படியாக, பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. குறித்த இரு தடுப்பூசிகளும் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
மொத்த மக்கள் தொகையில் சரிபாதி பேர்கள் இரு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டால், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இஸ்ரேல் போன்ற மாஸ்க் இல்லாத இயல்பு நிலைக்கு சுவிஸ் திரும்ப வாய்ப்புள்ளது என சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையின் நோயெதிர்ப்பு நிபுணர் ஸ்டீவ் பாஸ்கோலோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் அதன் வயது வந்தோரில் முக்கால்வாசி பேர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி போட்டுள்ளது. இதனால் நோய்த்தொற்று வீதங்கள் வீழ்ச்சியடைந்து, மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அது முக்கிய வாய்ப்பாக அமைந்தது.
சுவிஸில் நாளுக்கு 51,000 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் முதல் ஏப்ரல் 28 வரையான காலகட்டத்தில் மொத்தம் 2.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வழங்க முடிந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் இது 11 சதவீதமாகும். மட்டுமின்றி, ஐந்து நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 36 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய சுவிஸ் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.