கடந்தமாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் பத்து வருடங்களின் பின்னர் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவின் ஆட்சி மலர்கிறது.
பத்து வருடங்களின் பின்னர் தி.மு.க பெற்ற பாரிய வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
அதுமட்டும் இல்லாமல், மிக நீண்ட காலத்தின் பின்னர், தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்திகளாக திகழ்ந்த மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் இடம்பெற்ற முதல் தேர்தலாகவும் இது பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறபட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது பெரிதும் ஆராயப்பட்டு பேசப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 7ஆம் திகதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் உடனடியாக செய்து முடிக்க போவதாக ஒரு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக முனைப்புடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக இருப்பதால் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்சமயம் இலங்கையின் வசம் இருக்கும் கச்சத்தீவை, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையிடம் இருந்து மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலினின் வெற்றிக்கு இலங்கையில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
எனினும், இலங்கையின் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் அல்லது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்கள், நடவடிக்கைகள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டோ அல்லது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு இலங்கை நிச்சயமாக எதிரான பிரதிபலிப்பை காட்டும் என்பது நிச்சயமே.