கடல் வழியைப் பயன்படுத்தி நாட்டிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கையின் கடற் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 24 மணித்தியாலமும் விஷேட கடல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கடல் வழியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பிரவேசிப்பதன் மூலம் நாட்டிற்குள் கொவிட் – 19 தொற்று நோய் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை கருத்திற் கொண்டு அவற்றை தவிர்க்கும் வகையிலேயே வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பிராந்தியங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்டபில் இலங்கை கடற்படையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் பொது மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட கடல் வழி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படைப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்: –
விஷேட பாதுகாப்பு வேலைத் திட்டத்திற்கு அமைய இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பிராந்தியங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கப்பல்கள் மற்றும் அதிவேக தாக்குதல் படகுகள் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச கடல் எல்லை பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கரையோர பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டும் கரையோர கண்காணிப்பு படகுகளும் விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விஷேட நடவடிக்கைகளுக்காக கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து மேலதிக கப்பல்கள் மற்றும் படகுகள் வட பிராந்தியத்திற்கும், மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து சிலாபம் முதல் மன்னார் வரையான கடற் பிரதேசத்தின் ரோந்து நடவடிக்கைகளுக்கும் அனுப்பி வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கைகளுக்கு சமமாக மேற்படி கடற்பிரதேசத்தை அண்மித்த கரையோர பகுதிகளில் கடற்படையினர் தரைவழி ரோந்து நடடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் கண்காணிப்பு மையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடல் வழியைப் பயன்படுத்தி நாட்டிற்குள் சட்டவிரோதமாக எவரேனும் உட்பிரவேசிப்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அல்லது அவதானிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்குமாறும் வெளிநாட்டவர்களுடன் கடலில் எவ்வித தொடர்பை பேணுவதை தவிர்க்குமாறும் பிரதேச மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் கடல் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்ததன் மூலம் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட பலர் உடனடியாக எமது பொறுப்பில் எடுத்து மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது என்றும் கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.