ஐபிஎல் விளையாடும் அவுஸ்திரேலிய வீரர்களை தனி விமானம் மூலம் அழைக்கும் திட்டமில்லை என அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு சிஇஓ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் ஏப்ரல் 9ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கொரோனா வேகமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடைக்கு விதித்துள்ளது.
அதில், அவுஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து செல்வதற்கு தடைவிதித்துள்ளதுடன், மே 15ம் திகதி வரை இந்தத் தடை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, தடையை மீறினால் சிறைத்தண்டனை அல்லது அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் சில அவுஸ்திரேலியா வீரர்கள், அவுஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தங்களை சிறப்பு விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தற்போதைக்கு சிறப்பு விமானம் மூலம் அவுஸ்திரேலிய வீரர்களை சொந்த நாடு அழைக்கும் திட்டமில்லை என்று அவுஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.