மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இடத்தில் தீபாவே பொருத்தமாக இருப்பார் என்று 31.68 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.
அவருக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
போயஸ் தோட்டத்தில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி, ஆட்சி தலைமை ஒருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
நிர்வாகிகளின் விருப்பத்தின் படி சசிகலா விரைவில் முதல்வர் ஆவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் சசிகலாவிற்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?
ஜெயலலிதா இடத்தில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
ஜெயலலிதா இல்லாத தமிழக அரசு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நம்பிக்கையில்லை என்று 51.50 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். சிறப்பாக செயல்படும் என்று 9.09 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
தமிழக அரசின் நிர்வாகத்தில் சசிகலா குடும்பத்தினர் தலையீடு இருக்கும் என்று 39.41% பேர் கருத்து கூறியுள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது உடலை சுற்றி சசிகலாவின் உறவினர்களே நின்றிருந்தனர்.
ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தீபாவிற்கு ஆதரவாக 31.68% அதாவது 4,222 பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். சசிகலாவிற்கு ஆதரவாக 4.58% மொத்தம் 610 பேர் கருத்து கூறியுள்ளனர்.
ஜெயலலிதா இடத்தில் ஓபிஎஸ் பொருத்தமானவர் என்று 2,074 பேர் அதாவது 15.56% பேர் கருத்து கூறியுள்ளனர். மற்றவர்கள் என்று 46.16% அதாவது 6,419 பேர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.