ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் புகுந்து கொள்ளையர்கள் உண்டியலை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வைராகுடியிருப்பில் உள்ள அம்மன் கோவில் பின்புறம் கோவில் உண்டியல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்
விசாரணையில் அந்த உண்டியல் புல்லு விளையில் உள்ள சிவன்கோவில் கொடி கம்பம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் என்பதும் அதில் கடந்த 41 நாட்கள் நடந்த பூஜையின் போது சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை வசூல் ஆன பணம் இருந்ததாகவும் அதனை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் வைராகுடியிருப்பு அம்மன் கோவில் பின்புறம் கொண்டு சென்று தேங்காய் துருவி மற்றும் அரிவாள் கொண்டு அதனை உடைத்து பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசார் சிவன் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.