பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்த படம் ‘கவுதமிபுத்ரா சதகர்னி’. இது சரித்திர கதையை பின்னணியாக கொண்டு மிக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இது பாலகிருஷ்ணாவுக்கு 100-வது படம் ஆகும்.
அவருடன் ஸ்ரேயா, ஹேமமாலினி போன்ற பிரபல நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நேற்று முன்தினம் இந்தப் படம் ஆந்திரா- தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆனது.
ஐதராபாத்தில் உள்ள இந்தோ-அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்காக படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத் தியேட்டரில் திரையிடப்பட்டது. இதற்காக ரூ.500, ரூ.2000 என டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. பாலகிருஷ்ணா ரசிகர் ஒருவர் ஒரு டிக்கெட்டை ரூ.1 லட்சத்து 100 கொடுத்து வாங்கினார்.
அந்த ரசிகர் பெயர் கோபிசந்த் ஜின்னா முரி (27). எம்.பி.ஏ. பட்டதாரி. குண்டூர் மாவட்டம் நர்சராபேட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அங்கு சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகரான இவர் பாலகிருஷ்ணாவின் 100-வது படம் வெளியாவதையொட்டி அவரது கவனத்தை ஈர்க்க முடிவு செய்தார்.
இதையடுத்து சிறப்பு காட்சி பார்க்க வந்தார். காட்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்து டிக்கெட் கட்டணமாக ரூ.1 லட்சத்து 100-க்கான காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட ஏற்பாட்டாளர்கள் ரசிகரின் ஆர்வத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த ஆஸ்பத்தியின் டிரஸ்டிகளில் ஒருவராக பாலகிருஷ்ணா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இந்த படம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திரையில் பாலகிருஷ்ணா தோன்றிய போது, “ஜெய் பாலையா, ஜெய் பாலையா, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று கோஷம் எழுப்பினார்கள்.