தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை மலையாள நடிகர் ஜெயராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பலரது புருவங்களை உயர்த்தியது. மலையாள நடிகர் ஒருவர் நேரில் வந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கிறாரே என்று அறிவாலயத்திலேயே முணுமுணுக்கப்பட்டது. தற்போது, அதற்கான விடை கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது. நாளை (மே.7) காலை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய நிகழ்வில் அவர் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார்.
திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் முதல் பல்வேறு பிரபலங்கள் வரை தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில், சற்று ஆச்சர்யம் அளிக்கும் வகையில், மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸுடன் சென்னை வந்து, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
கதை விவாதம்
மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் வசூல் ரீதியாக சரிவை சந்திக்க தனது அடுத்த ஸ்க்ரிப்ட்டுக்கான விவாதத்தில் கிருத்திகா ஈடுபட்டு வந்தார்.
மாற்றப்பட்ட ஹீரோ
இதற்கிடையே, கொரோனா உலகம் முழுவதும் பரவ, அவரது அடுத்த படத்திற்கான பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது தனது புதிய படத்துக்கான கதை, திரைக்கதையை முடித்துத் தயாராகிவிட்டார் கிருத்திகா உதயநிதி. இந்தப் படத்தின் நாயகனாக ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் சில பல சிக்கல்களால் தனது ஹீரோவை கிருத்திகா மாற்றிவிட்டதாக தெரிகிறது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
அதன்பிறகு, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், தயாரிப்பாளர் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவருமாம். இதுகுறித்த டிஸ்கஷனில் கலந்து கொள்ள வந்த ஜெயராம், முதல்வராக தேர்வாகியுள்ள ஸ்டாலினை சந்திக்காமல் சென்றால் நன்றாக இருக்காது என்று, மகனுடன் சேர்ந்து வந்து தனித்தனியாக சால்வை போர்த்தி தமிழகத்தின் அடுத்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஹீரோவான மகன்
எது எப்படியோ, மலையாளத்தின் டாப் வசூல் ஹீரோக்கள் பட்டியலில் ஜெயராம் இல்லையென்றாலும், ஸ்டாலின் மனதில் இடம் பெற்றதோடு மட்டுமில்லாமல், முதல்வரின் மருமகள் படத்தில் மகனையும் ஹீரோவாக்கி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் என்று முணுமுணுக்கின்றனர்.